Sunday, 22 January 2012

உங்களைப் போலவே






உங்களைப் போலவே
சாத்தானின்
எல்லையற்ற ஆசீர்வாதங்களோடும்
கடவுளின்
தீராத சாபங்களோடும்
பிறந்துவிட்ட
என்னை மட்டும்
பெண் என்கிறீர்கள்

உங்கள் பிரியங்களை
மடியிலிட்டு
தடவி
தழுவி
பச்சையாகவே
புசிக்கத் துடிக்கும்
என் பசியை
திமிர் என்கிறீர்கள்

உங்களைச் சமைத்து
உங்கள் பசித்த வயிறுகளுக்கு
படையலிடும் என் போக்கை
ஆணவம் என்கிறீர்கள்

உங்கள் தோல்விகளை
ஏவாளின் ஒரேஆடையென
திரும்பத் திரும்ப
அணிந்து அணிந்து
உங்களைச் சாய்ப்பதை
காமம் என்கிறீர்கள்

என் அவிழ்தலில் பிறக்கிறது
உங்கள் தோல்வி

எங்கள் வெற்றி
பெண் சிசுக்களாய்.

ஒரு பூ



என் வீட்டு மல்லிகைச் செடியில்
ஏழெட்டுப் பூக்கள்

மனிதர்களைப் போலவே
தாவரங்களிலும்
தேடலுக்காய்
என்ணற்ற இலைகள்

எனினும்
ஒரு பூ ஒளிர வைக்கிறது
ஒரு தோட்டத்தை
ஒரு வீட்டை

நன்றி

விழி நகர்த்தி
இமைநுனி கோத்திருக்கும்
இரு முத்துகள்
எப்போதும் விழக்கூடும்
அணையப் போகும் விளக்கை
தூண்டும் விரல்களின் மீது

நெருப்பென ஒன்றாய்
நிலவென ஒன்றாய்


Saturday, 14 January 2012

கனல்

                                                      ஒருமுறை வந்து
                                                     அணைத்துவிட்டுப் போ
                                                     பற்றி எரிய வேண்டும்
                                                     நான்.

Thursday, 12 January 2012

அன்பிற்கான நேரம்

உன் அன்பிற்காக ஒதுக்கப்பட்ட நேரம்                          
காத்திருக்கிறது
புன்னகை ஏந்திய பூங்கொத்துகளுடன்

உன் வருகை
நிகழாதென உணர்ந்திருந்தும்
நிகழ்ந்துகொண்டே இருக்கிறது
உன் அன்பிற்காக ஒதுக்கப்பட்ட நேரம்                              

நம்பிக்கை வளர்த்த
பெருமர நிழலின்
பாதங்களில் அமர்ந்தபடியே
உலகை
வெவ்வேறு விதமாக
ஒப்பனை செய்து
விடைபெற்று மீளும்
பருவங்களை பார்த்தபடியே
காத்திருக்கிறது                                  

பூங்கொத்துகள் உதிர்ந்து வளர்த்த
பூங்காடுகளுக்கு நடுவே
பூங்கொத்துகளோடு
                       

Friday, 6 January 2012

மயிலிறகு பக்கங்கள்

என் புத்தகத்தில்
ரகசிய பக்கங்கள் என்று எதுவுமில்லை
பால்யத்தில்
ஒளித்து வைத்திருந்த ஒரே ஒரு மயிலிறகு

இப்போது குட்டிபோடத் தொடங்கிவிட்டது
மளமளவென்று
வாங்கி வாங்கி அடுக்க வேண்டும்
நிறைய நிறைய புத்தகங்கள்

பின்னொருநாள் நீங்க்ள் கேள்விப்படக்கூடும்
புத்தகங்கள் மயிலிறகுகள் ஆன கதைகளையும்
மயிலிறகுகள்
ஒரு ஆண்மயிலான கதைகளையும்
அந்த ஆண்மயிலுடன்
நான் வனமேகிய கதைகளையும்.