Monday 21 November 2011

ஏனெனில் இது எனக்குமான மழைக்காலம்

எனக்கு வயது 43
கறுத்த நிறம்
பருமனான உடல்
குள்ளமான உருவம்
.....  ...... ........
.... ...... .........
........ ...... .....

இருந்தாலென்ன?
நான் உள்ளே இருக்கமாட்டேன்
ஏனெனில்
வெளியே மழை

மழையில் கரைகிறது என் வயது

எதைக் காண்பித்தும் திரும்பப் பெற முடியாத
எனது பால்யத்தின் கனவுகள்
மழைத்துளியின்
சிறு குமிழை
விரல்நுனி தொட்டதும்
மாய உலகென
திறந்து விரிந்து நீள்கிறது

எல்லோரும் இருக்கிறார்கள்
உயிரோடும்
உயிர்ப்போடும்

இங்கும் மழை

மேலும் கீழும் ஆட்டி
மழையோடு விளையாடும் என் கைகளுக்கு
இப்போது வயது பத்து விரல்களுக்குள்

பூச்செண்டு குரலால்
அதட்டி உள்ளே அழைக்கும் அம்மா
கைநிறைய வறுத்த புழுங்கல் அரிசி தருகிறாள்

அப்பா தாழம்பூ வாங்கி வர
சவுரி முடி வைத்து
நுனியில் குஞ்சம் தொங்க
பூச்சடை பின்னி விடுகிறாள்

பட்டுப் பாவாடை சட்டை
தோடு ஜிமிக்கி வளையல்கள் அணிந்து
தோழிகளோடு தட்டாமாலை சுற்றுகிறேன்

வீடுகளும் தெருவும் மலையும்
வானமும் தரையும்
ஒன்றையொன்று பற்றியபடி
எங்களோடு சுழல்கின்றன

இன்னும் மழை

மழை முத்துகளைப் பறித்து
மழைக் கம்பிகளால் கோர்த்து
கால்களில் அணிந்து
குதித்துப் பார்க்கிறேன்
கலீர் என்ற ஒலிக்கு
திடுக்கிட்டு நிற்கிறது மழை

என்னை அடையாளம் கண்டு
மீண்டும் குதூகலிக்கிறது

மழை நாளில்
பால்யத்திடமிருந்து
என்னை விடுவிக்கும்
மந்திரம் அறிவீரோ?

1 comment:

  1. I love this poem, no no, i love my paalyam through this poem. Thanks Rathika.

    ReplyDelete